தக்காளி இளநீர் கிளியர் சூப் செய்வது எப்படி?





தக்காளி இளநீர் கிளியர் சூப் செய்வது எப்படி?

எந்தவித ரசாயனமும் கலக்காத அன்று முதல் இன்று வரை ஓர் இயற்கை உணவாக இருப்பது இளநீர். பானங்களில் இயற்கை அளித்த ஒரு பெரும்கொடை இளநீர் என்று கூறலாம். 
தக்காளி இளநீர் கிளியர் சூப்
உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு உண்டு. உடல் பருமனால் சிரமப்பட்டு உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துங்கள். 

இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது உடலின் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும் நார் சத்து அதிகம் கொண்டது. 

மலச்சிக்கல் மற்றும் அமிலத் தன்மை யிலிருந்தும் விடுபடவும், செரிமான பிரச்சனைகளை நீங்கவும் இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடையும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். 

இத்தகைய சூழ்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.  

தேவையான பொருட்கள்

தக்காளிச் சாறு - கால் கப்,

இளநீர் - 2 கப் (அதிக இனிப்பு இல்லாத இளநீராக இருக்க வேண்டும்),

இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன்,

கொத்தமல்லி, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

உப்பு - சிறிதளவு.

நெய் - ஒரு டீஸ்பூன்,

பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்).

கடுகு - அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

செய்முறை

கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளிச் சாறு, இளநீர், இஞ்சிச் சாறு, உப்பு சேர்த்து நுரை வரும் வரை கிளற வேண்டும். 

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் இளநீர் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கடைசியாக, அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து சுடசுட சாப்பிடுங்கள். சூப்பரான தக்காளி இளநீர் கிளியர் சூப் ரெடி.
Tags: