கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?





கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, LDL என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. 
கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் செய்முறை
எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். 

ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. 

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.

ஆடி 18ம் பெருக்குக்கு சூப்பர் சுவையில், கொஞ்சம் வித்தியாசமான சர்க்கரைப் பொங்கல் செய்து கொண்டாடுவோமே ! 

தேவையானவை:

கருப்பரிசி - ஒரு கப்

பச்சைப் பருப்பு - 1/4 கப்

உப்பு - துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)

வெல்லம் - ஒரு கப்

பால் - 1/4 கப்

தேங்காய்ப் பூ - 2  டீஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 10

ஏலக்காய் - 1

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் கழுவி விட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.

நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, வெல்லம் கரைந்ததும், மண் & தூசு போக வடிகட்டி விட்டு, 

மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும் போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறி விடவும்.

பிறகு தேங்காய்ப் பூ, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். அடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறிக் கொடுத்து இற‌க்கவும். இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.

கடைசியில் ஒரு சிறு குறிப்பு:

நெய்யில் முந்திரியை வறுத்துக் கொண்டு அதிலேயே பொங்கலைக் கொட்டிக் கிளறி எடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். அது வேறொன்று மில்லை, நெய் முழுவதும் சேர்வதால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.
Tags: