வெந்தய களி செய்முறை | Fenugreek pudding Recipe !





வெந்தய களி செய்முறை | Fenugreek pudding Recipe !

வெந்தயம் கசப்புத் தன்மையாக இருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்ப மாட்டார்கள். ஆனால் அதன் நன்மைகளை அறிந்த நம்முடைய பாட்டிகளும், அம்மாக்களும் அதை எப்படியாவது சமையலில் பயன்படுத்தி சாப்பிட வைத்து விடுவார்கள்.
வெந்தய களி
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வயிறு பொருமல், உடல் சூடு, வயிற்று வலி, பேதி போன்றவைகளுக்கு வெந்தயம் அருமையான மருந்தாகும். 

சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத் தொல்லையை போக்கவும் பயன்படுத்தப் படுகிறது.

20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்கு முறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும். 

மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வாய்வு, வயிற்று பொருமல் நீங்கும். உடல் சூட்டை தணிக்க முளைக்கட்டிய வெந்தய களியை சாப்பிடலாம். 

உடலை வனப்புடன் வைக்க உதவும் வெந்தயத்தை பொடியாக்கி தண்ணீர்/ மோரில் கலந்துக் குடித்து வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 50 கிராம்,

முளைகட்டிய வெந்தயம் – 2 டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

சர்க்கரை – 4 டீஸ்பூன்,

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை :

புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கவும். முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் பொடித்த அரிசியுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். 

அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அரிசி – வெந்தய விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து களி போல கிளறி சாப்பிடவும்.
Tags: