இனிப்பு சோமாஸ் செய்முறை !





இனிப்பு சோமாஸ் செய்முறை !

மாலை நேரத்தில் சுவையான சிற்றுண்டி கேட்டு தொந்தரவு செய்யும் குழந்தைகளுக்கு இனிப்பினால் ஆன சத்தான, சுவையான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.
இனிப்பு சோமாஸ்
தேவையான பொருட்கள்: 

ரவை (அ) மைதா மாவு – அரை கிலோ 

சர்க்கரை – 1 கிலோ 

வறுகடலை – அரை கிலோ 

தேங்காய் – 3 

ஏலக்காய் பொடி – சிறிதளவு

நெய் – சிறிதளவு 

நல்லெண்ணெய் – சிறிதளவு 

செய்முறை: 

வறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, 

அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும். ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும். 

பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம். 

ஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.) அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து,
அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். 

பின்னர் பூரணம் வைத்துள்ள பகுதிக்கு வெளியே உள்ள அதிகப்படியான மாவை வெட்டி எடுத்தால் ஒரு அழகான வடிவத்தில் வரும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுத்துக்கொள்ளவும். 

ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சி, அதில் பொரித்து வைத்துள்ள சோமாசுகளை நனைத்து எடுக்க வேண்டும்.
Tags: