சுவையான அரைக்கீரை கொத்துக்கறி மசாலா செய்வது எப்படி?

அரைக்கீரையுடன் கொத்துக்கறி சேர்ந்து நிச்சயம் ஒரு புதுச் சுவையாகத் தான் இருக்கும். செய்து பார்த்து ருசித்து அந்த அபார சுவைக்குள் மனதை மூழ்கடிப்போமா…..!
அரைக்கீரை கொத்துக்கறி மசாலா
தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி (மட்டன்) – 1/2 கிலோ

அரைக்கீரை – 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

தனியாத் தூள் – 3 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன்

சோம்பு – 4 (பொடியாக நறுக்கியது)

பட்டை, லவுங்கம், ஏலக்காய் – தலா 2

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

தயார் செய்து கொள்ள வேண்டியவை:
கொத்துக்கறி (மட்டன்) சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். அரைக்கீரை கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். 
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடி செய்ய வேண்டும்.

செய்முறை.:

கொத்துக்கறியை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சிறிது உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரில் மூன்று சத்தம் வரும் வரை வைத்திருந்து இறக்கி ஆற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். 
நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிள்காய் ஆகிய வற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அதில் வேக வைத்த கொத்துக் கறியையும் சேர்த்து வதக்கவும். 
கீரையும், கறியும் மசாலாவுடன் சேர்த்து வெந்து நன்கு கெட்டியானதும் இறக்கி விடவும்.

இப்போது அரைக்கீரை கொத்துக்கறி மசாலா ரெடி. சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.
Tags: