தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பிரபலமாக உள்ள பிரியாணி இந்திய உணவே அல்ல என்றால் பலரும் நம்பவே மாட்டார்கள்.
சிறுவயதிலிருந்து பிரியாணியை சுவைத்து மகிழ்ந்த அவர்களுக்கு பிரியாணி மேற்கு ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த உணவு என்பது வியப்பை தான் ஏற்படுத்தும்.
பாரசீகத்திலிருந்து மத்திய ஆசியா, அங்கிருந்து இந்தியா என பிரியாணியின் பயணம் மிக நீண்டது.
அரேபிய வியாபாரிகள் மூலமாக கேரளாவுக்கும், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் பிரியாணி வந்தது.
தமிழ்நாட்டிலே நவாப்கள் ஆட்சிக் காலத்தில் பிரபலமான ஆம்பூர் பிரியாணியைப் போலவே,
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமாரி வரை விதவிதமாக பல்வேறு பிரியாணி வகைகள் இந்தியாவின் சுவை அரும்புகளை மலரச் செய்துள்ளது.
அரிசி மற்றும் இறைச்சியை ஒன்றாக சமைத்து உண்ணுவதே பிரியாணி என்ற நிலை மாறி, காய்கறி, முட்டை, மீன், இறால் என பல பொருட்களையும் அரவணைத்து செல்கிறது இன்றைய பிரியாணி.
ஐதராபாத் பிரியாணி, பாஸ்மதி அரிசியை பயன்படுத்தாத கேரளாவின் மலபார் பிரியாணி என பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளது.
லக்னோ போன்ற பகுதிகளில் பிரபலமான முகலாய பிரியாணி, காஷ்மீரின் இனிப்பு பிரியாணி போன்ற
மாற்றங்களை மேற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்!
மாமிச வகைகள் மற்றும் அரிசியை பாதி சமைத்து பின்னர் பிரஷர் குக்கர் போல பாத்திரத்தை கோதுமை மாவு கொண்டு
மூடி மெதுவாகச் சமைக்கப்படும் தம் பிரியாணியை ருசிக்கும் பட்டாளம் வட இந்தியாவில் அதிகம்.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் மேமன் பிரியாணி, பார்சி பிரியாணி வகைகளும் பிரபலம்.
இந்தியாவுக்கு வந்த பிரியாணிக்கும், தற்போது பிரபலமாக உள்ள பிரியாணி வகைகளுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.
இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு மசாலா வகைகள் பிரியாணியின் சுவையை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை