டேஸ்டியான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி?





டேஸ்டியான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி?

0
உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை முக்கியமான உணவுப் பொருளாக உள்ளது. அதனால், தான் மருத்துவர்கள் நமது உணவு பழக்கத்தில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். 
டேஸ்டியான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி?
அவித்த முட்டை பிடிக்காதவர்கள் முட்டை பொரியல், ஆம்லெட், வேகவைத்த மசாலா முட்டை என பல முறைகளில் சமைத்து சாப்பிடுகிறோம்.

அதுவும், ஆம்லெட் என்றால் நம்மில் பலருக்கும் பிடித்த உணவு பொருட்களில் ஒன்று… எப்போது ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், அண்ணா, பெப்பர் தூக்கலா ஒரு ஆம்லெட் என்ற வார்த்தை இல்லாமல் அன்றைய சாப்பாடு முடித்திருக்காது. 
அப்படி, நீங்களும் ஆம்லெட் பிரியராக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஒரு புதிய வகை ஆம்லெட் ரெசிபி பற்றி கூறுகிறோம். இந்த ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள்… உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 2, 

பெரிய வெங்காயம் – ஒன்று, 

சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், 

கடுகு – கால் டீஸ்பூன், 

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், 

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், 

மல்லி தூள் – அரை டீஸ்பூன், 

கரம் மசாலா – கால் டீஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை : 
முதலில் மசாலா ஆம்லெட் செய்வதற்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு முட்டைக்கு இந்த அளவு கொடுக்கப் பட்டுள்ளது. 

அதற்கு மேல் நீங்கள் முட்டை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப அளவுகளையும் கூட்டிக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் ஒன்றை மீடியம் அளவில் எடுத்து தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் தோசைக் கல் ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வையுங்கள். தோசைக்கல் கொஞ்சம் சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். 
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். 

வெங்காயம் சீக்கிரம் வதங்கி வர தேவையான அளவிற்கு உப்பை சேர்த்து வதக்கி பாருங்கள். அதற்குள் தேவையான அளவிற்கு முட்டையை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளுங்கள். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும் பொழுது மசாலா வகைகளை இப்பொழுது ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். முதலில் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். 

பின்னர் அதிலேயே மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து தேவை என்றால் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி விடுங்கள். 

இவை நன்கு வதங்கிய பின்பு தோசைக் கல்லில் இருந்து ஓரமாக ஒதுக்கி வையுங்கள். இப்போது நீங்கள் அடித்து வைத்துள்ள முட்டையை நடுப்பகுதியில் ஊற்றி பரப்பி விடுங்கள். 
பின்னர் ஒதுக்கி வைத்துள்ள இந்த வெங்காய கலவையை தோசை கரண்டியால் எடுத்து அப்படியே முட்டை கலவையின் மீது போட வேண்டும். 

பின்னர் ஒருபுறம் நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வையுங்கள். இதை செய்யும் பொழுது குறைந்த தீயில் வைத்துக் கொண்டு செய்யுங்கள். 

இருபுறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து சுடச்சுட இந்த மசாலா ஆம்லெட்டை பரிமாற வேண்டியது தான். 

ரொம்பவே சூப்பரான ருசியாக இருக்கக் கூடிய இந்த ஆம்லெட்டை இந்த முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)