சுவையான குட்டநாடன் மீன் குழம்பு செய்வது எப்படி?





சுவையான குட்டநாடன் மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 
Kuttanadan Meen Curry
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 

பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது. 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிய வந்துள்ளது. ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். 

அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது.அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையா கவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். 

சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்: 
மீன் - 1 கிலோ 

புளி (குடம்புளி) - 4 துண்டுகள் 

உப்பு - தேவையான அளவு 

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

வெந்தயம் - 1 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது) 

பூண்டு - 6-7 (நறுக்கியது) 

இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது) 

காஷ்மீரி மிளகாய் தூள் - 1-2 டேபிள் ஸ்பூன் 

மல்லித் தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

செய்முறை: 

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குடம்புளி அல்லது புளியை 1 கப் வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 
பின்பு ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம் சேர்த்து 10 நொடிகள் தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அதற்குள் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூளை 3-4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு,
வாணலியில் ஊற்றி, குறைவான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கிளறி விட வேண்டும். 

பிறகு ஊற வைத்த குடம்புளியை நன்கு கையால் பிசைந்து, அதனை அப்படியே வாணலியில் ஊற்றி, வேண்டுமானால் அத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். 

பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் 20 நிமிடம் நன்கு மீனை கொதிக்க விட்டு இறக்கி, 30 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், குட்டநாடன் மீன் குழம்பு ரெடி!
Tags: