வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் செய்வது எப்படி?





வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் செய்வது எப்படி?

0

சாலட் (salad), என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு பவுல் சாலட்டை உணவுக்குப் பதில் சாப்பிட்டால் நல்லது.

வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட்
லெட்யூஸ், கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற மரக்கறிகள், அன்னாசி, மாம்பழம், அவகாடோ போன்ற பழங்கள், பாதாம், கயூ, வால்நட் போன்ற கொட்டைகளும் கலந்து சாலட் தயாரிக்கப்படும். 

சாலட் என்பது இலையின் ஓர் ஓரத்தில் கொஞ்சமாக வைப்பது இல்லை. வெளிநாடுகளில் ஒரு பெரிய பவுல் நிறைய சாலட் மட்டும் சாப்பிடுவார்கள். 

அதிலேயே பழங்கள், நட்ஸ், சிறு தானியங்கள், ஸ்ப்ரவுட்ஸ், கொண்டைக்கடலை, ஆலிவ் ஆயில் போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் ஒரு கம்ப்ளீட் உணவாகி விடும். 

சாலட்டில் வெறும் காய்கறிகள் / பழங்கள் மட்டுமன்றி சாலட் டிரெஸ்ஸிங் என்று ஒன்றைச் செய்து கலப்பது வழக்கம். 

இதில் பொதுவாக ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, மயோனைஸ் ஆகியவை சேர்க்கப்படும் (ஆலிவ் ஆயிலுக்குப் பதிலாக ரிஃபைண்ட் ஆயிலை சேர்க்கலாம்).

அதிலும் நாம் தயாரிக்கப் போகும் பீட்ரூட் - கேரட் சாலட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சாலட்டில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

தேவையான பொருட்கள்  :

துருவிய பீட்ரூட் - 1/2 கப்

துருவிய கேரட் - ½ கப்

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

ஊற வைத்த நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை ஜூஸ் - பாதி பழம்

மிளகுத் தூள் - ¼ டீஸ்பூன்

இந்துப்பு - சிறிதளவு

தாளிக்க :

கடுகு, உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்

கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு

எண்ணெய் - அரை டீஸ்பூன்

செய்முறை :

கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், தேங்காய் போட்டு கிளறவும்.

பின்னர் அதில் நிலக்கடலை போட்டு கிளறவும். மேலும், இதில் மிளகு தூள், இந்துப்பு போட்டு கலக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சாலட்டில் போட்டுக் கிளற வேண்டும்.

கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும். சத்து நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் ரெடி. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)