வித்தியாசமாக கத்திரிக்காய் இடியாப்பம் செய்வது எப்படி?





வித்தியாசமாக கத்திரிக்காய் இடியாப்பம் செய்வது எப்படி?

0

வழக்கமான டிபன் வகைகளான இட்லி, தோசை மற்றும் பூரி போன்றவற்றை சாப்பிட்டு வரும் நாம் சற்று மாறுதலாக அவ்வப்போது சுவைப்பது தான் இந்த இடியாப்பம்.

கத்திரிக்காய் இடியாப்பம் செய்வது

கத்திரிக்காயில்  உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். முதல் கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. 

கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.

இதில் சற்று வித்தியாசமாக கத்திரிக்காய் கொண்டு இடியாப்பம் எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.

தேவையானவை: 

இட்லி அரிசி – 250 கிராம், 

பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, 

கத்திரிக்காய் – நான்கு (நறுக்கிக் கொள்ளவும்) 

நெய் – 4 டீஸ்பூன், 

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: 

கடலைப் பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், 

காய்ந்த மிளகாய் – ஒன்று, 

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: 

இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 

வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). 

மாவு வெந்ததும் நன்கு பிசைந்து சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும்.

(உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும்.

(உருண்டைகளை சரி பாதியாக ‘கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக் கூடாது. அது தான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேக விட வேண்டும்).

பிறகு வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து… நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். 

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு… கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். 

வதக்கிய கத்திரிக்காய் கலவையை இடியாப் பத்துடன் சேர்த்து, பொடியையும் தூவி நன்றாகக் கலக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)