புரதச்சத்து நிறைந்தது, மலிவான விலையில் கிடைப்பது, எல்லோராலும் உண்ணக் கூடியது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.
இப்போது அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டையை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். காரணம், முட்டையில் இறைச்சிக்கு நிகரான கொழுப்பும் புரதமும் நிறைந்துள்ளன.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடனடியாக புரதம் மற்றும் கொழுப்பு கிடைக்கச் சிறந்த உணவு முட்டை. ஆனால், எப்போதும் பலர் செய்யும் ஒரே தவறு, முட்டையின் மஞ்சள்கருவை ஒதுக்குவது.
முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தை வைத்துக் கொண்டு பலரும் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுகிறார்கள்.
உண்மையில், முட்டையின் வெள்ளைக் கருவை விட மஞ்சள் கருவில் தான் அதிக ஊட்டச் சத்துத்துக்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் கே, அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கோலின், செலினியம், துத்தநாகம் போன்றவை நிரம்பியுள்ளன.
மஞ்சள் கரு, சில தகவல்கள்...
* ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற உதவும்.
* வெள்ளைக் கருவில் புரதம் மட்டுமே நிறைந்துள்ளது. ஆனால், மஞ்சள்கருவில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளன.
* இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு வலுகொடுக்கும். ஆஸ்டியோபோரசிஸ் வராமல் தடுக்கும்.
* மஞ்சள் கருவில் உள்ள செலினியம் மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
* ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். உடலில் ஆக்சிஜன் சீராகப் பரவ உதவும்.
* இதில் நிறைந்துள்ள கோலின் ஊட்டச்சத்து, மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
* மஞ்சள் கருவில் உள்ள கோலின் ரத்த நாளங்களைப் பாதிக்கும் ஹோமோசைஸ்டின் அளவை (Homocysteine Level) ஒழுங்குபடுத்தும்.
மேலும், இது ஆன்டி இன்ஃப்ளாமேட்டரியாகச் (Anti-inflammatory) செயல்பட்டு இதய நோய்கள் வராமல் தடுக்கும்.