வேர்க்கடலை – அவல் உப்புமா செய்வது எப்படி?





வேர்க்கடலை – அவல் உப்புமா செய்வது எப்படி?

வேர்க்கடலை நம்மை பொறுத்தவரை ஒரு சிறந்த சிற்றுண்டி. சிலர் வேகவைத்து, சிலர் வறுத்து, சிலர் கடலை மிட்டாயாக என பல்வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்வார்கள். 
வேர்க்கடலை – அவல் உப்புமா
மேலும் நாம் அடிக்கடி சாப்பிடும் மிக்சர் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களிலும் வேர்க்கடலை சேர்க்கப்படுகிறது. இவை எளிதாக கிடைக்கக் கூடியது, விலை மலிவானது. 

ஆனால் ஆரோக்கியத்தில் அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் பருப்புகளைப் போல் சக்தி வாய்ந்தவை. வேர்க்கடலை உண்மையில் பீன்ஸ், பயறு மற்றும் சோயா போன்ற பயிர்களின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பருப்பு வகைகள். 
ஆனால் வேர்க்கடலை தனித்து நிற்கிறது, காரணம் இவற்றை பச்சையாகச் சாப்பிடலாம். 

அதனால் தான் வேர்க்கடலையை கடலைப் பருப்பு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தாக்களுடன் சேர்த்துப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

தேவையானவை:
கெட்டி அவல் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு (வேக வைக்கவும்)

பச்சை மிளகாய் – 2
சீரகத்தூள் – 2 சிட்டிகை

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிதளவு

கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:
வேர்க்கடலை – அவல் உப்புமா
வேர்க்கடலையை 12 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். அவலை நன்கு அலசி தண்ணீரை வடிய விடவும். 

பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் அவலைச் சேர்த்து மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு புரட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக விடவும். 
பிறகு வேக வைத்த வேர்க்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்த மல்லித்தழை தூவி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு :

அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். 

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம்.
Tags: