விடுமுறை நாட்களில் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சுவைக்காமல், நன்கு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்ற வற்றையும் ருசித்துப் பாருங்கள். 
நண்டு தொக்கு மசாலா

அதிலும் அடிக்கடி நண்டு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

எனவே இந்த வாரம் நீங்கள் நண்டு தொக்கு மசாலாவை செய்து சுவைத்து மகிழுங்கள்.

இங்கு நண்டு தொக்கு மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது.

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:

நண்டு – 5-6 (பெரியது)

வெங்காயம் – 1

தக்காளி – 2

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 1 கப்

கடுகு – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு…

சின்ன வெங்காயம் – 10-15

பட்டை – 1-2

கிராம்பு – 1-2

கல்பாசி – சிறு துண்டு

சீரகம் – 1 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

வர மிளகாய் – 5-6

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 6-7 பற்கள்

தேங்காய் – சிறு துண்டு
செய்முறை:
நண்டு தொக்கு மசாலா
முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். 

பிறகு அதில் தக்காளி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். 

பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் நண்டையும் சேர்த்து பிரட்டி விட வேண்டும். 
நண்டில் இருந்து நீர் வெளியேறி சுண்டிய பின், சிறிது தண்ணீர் தெளித்து, நண்டு சிவப்பாக மாறும் வரை வேக வைத்து இறக்கினால், நண்டு தொக்கு மசாலா ரெடி!!!