கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.
குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த கொள்ளு கொண்டு சுவையான வரகு கொள்ளு பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை.:
வரகு அரிசி – 200 கிராம்
கொள்ளு – 50 கிராம்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 15
நெய் – 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – ஒன்று
கொத்த மல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். வரகரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத் தெடுக்கவும்.
கறிவேப்பிலையுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத் தெடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை விழுது சேர்த்துக் கிளறவும்.
அதனுடன் இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, கொத்த மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில் விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியை விட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.