ருசியான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?





ருசியான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?

எப்போது நண்டு வாங்கினாலும், உயிருள்ள நண்டுகளை வாங்குவதுதான் நல்லது என்கிறார்கள்.. நண்டின் மேலுள்ள ஓடு, நன்றாக தடிமனாக இருக்க வேண்டுமாம். 
நண்டு ஆம்லெட் செய்வது
நண்டினை எண்ணெயில் வறுக்காமலும், பொறிக்காமலும், சூப், குழம்பு, மசாலா, வறுவல் செய்து சாப்பிட்டால், முழுமையான ஊட்டச்சத்து நமக்கு கிடைக்கும். 

அது மட்டுமல்ல, இது உடலுக்கு சூடு கொடுக்கும் என்பதால், மழைக் காலங்களில் தாராளமாக எடுத்து கொள்ளலாம். சளித்தொல்லை இருக்கும் போது, நண்டு சூப் வைத்து குடித்தால், நிவாரணம் கிடைக்கும். 

நண்டு சுத்தம் செய்த பிறகு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, மஞ்சள், தக்காளி சேர்த்து சூப் போன்று நன்கு கொதிக்க வைத்து சாப்பிட்டால், ஜலதோஷம், நெஞ்சு சளி காணாமல் போகும். 
அல்லது நண்டு ரசம் செய்து சாப்பிடலாம். மட்டன் சிக்கன் உணவுகளை விட கடல் உணவுகளில் சத்துக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதில் இந்த நண்டு மிக முக்கியமானது. 

சரி இனி நண்டு  பயன்படுத்தி ருசியான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள் :

நண்டு – 3

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – ஒன்று

சின்ன வெங்காயம் – 4
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்

சோம்புத்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கொத்த மல்லித்தழை – சிறிதளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

ஆம்லெட்க்கு:

முட்டை – 4

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை :

வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியாக தட்டி வைக்கவும். நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். 
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

அடுத்து அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். நண்டு நன்றாக வெந்து தொக்கு பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
நன்றாக வெந்ததும் நண்டில் இருந்து சதை பகுதியை எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

அடுத்து அதில் நண்டு சதை, நண்டு வேக வைத்து மசாலா, தேவைப்பட்டால் உப்பு (நண்டு வேக வைக்கும் போதே உப்பு போட்டு தான் வேக வைத்திருக்கிறோம்) சிறிதளவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து நண்டு, ஆம்லெட் கலவையை ஊற்றி, இரு புறமும் திருப்பி விட்டு வேக வைத்து சூடாக எடுத்து பரிமாறவும். சூப்பரான நண்டு ஆம்லெட் ரெடி.
Tags: