சிறிய வெங்காயத்திலிருந்து 5 மில்லி அளவுக்கு அரைத்து எடுத்த சாற்றை, மோர் அல்லது தேனோடு கலந்து தினமும் குடித்தால், அதிகப்படியான கொழுப்பால் ஏற்படும் இதய அடைப்புப் பிரச்னையிலிருந்து நிச்சயம் தற்காத்துக் கொள்ளலாம்.
இதனால் தான், பழைய சோற்றுக்குச் சிறிய வெங்காயம் என்ற காம்பினேஷன் உருவானது. இயற்கை மருத்துவத்தில் இது மிகப் பெரிய வரப்பிரசாதம்.
தாளித்து அல்லது வேக வைத்துச் சாப்பிடுவதைவிட, சமைக்காமல் அப்படியே பச்சையாகச் சாப்பிடும்போது வெங்காயம் மிகச் சிறந்த மருத்துவப் பொருளாகச் செயல்படுகிறது.
மேலும், இது ஜீரண சக்தியையும் வலுப்படுத்துகிறது. கோடை காலத்தில், சிறிய வெங்காயத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதைக் குறித்துக் கொள்ளவும்.
பல்லாரி அல்லது பெரிய வெங்காயத்தில் வீரியத்தன்மை குறைந்திருக்கும். இது, ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றுவதற்கு உதவி செய்கிறது.
அதிகப்படியான உணவு வகைகளைச் சாப்பிட்டாலும் கூட, இந்த வெங்காயம் சிறிதளவு சாப்பிட்டால் எளிதில் ஜீரணமடையும். பெரிய வெங்காயத்துடன், தக்காளி, கோஸ், போன்றவற்றைச் சேர்த்து சாலட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.
வெங்காயம் குறைந்த கலோரி உணவுப் பொருள். காய்கறிகளோடு சேர்த்துச் சாப்பிடும்போது, அதன் சக்தி மேலும் அதிகரிக்கிறது. இப்போதெல்லாம் வெங்காயத்துக்குப் பதிலாக, முட்டைகோஸைப் பயன்படுத்துகிறார்கள்.
இப்படிச் செய்யும் போது சுவையைச் சரிப்படுத்த முடியுமே தவிர, வெங்காயத்தின் பிரத்யேக ஊட்டச்சத்து உணவில் சேராமல் போகும்.
என்ன உணவாக இருந்தாலும், சிறிதளவு வெங்காயம் சேர்த்தால் மட்டுமே அதன் சக்தி உடலைச் சென்றடையும். சரி இனி சுவையான சூப்பரான வெள்ளரி – வெங்காயம் தயிர் பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை:
புளிக்காத புது தயிர் – 1 கப்,
வெள்ளரி – பாதி,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி (சற்று கெட்டியாக) – 1,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு,
மல்லித்தழை (விருப்பப் பட்டால்) – சிறிது.
செய்முறை:
வெள்ளரி, வெங்காயத்தை தோல் சீவி, நீளவாக்கில் மெல்லிய தாக நறுக்குங்கள். தக்காளி, பச்சை மிளகாயையும் மெல்லியதாக நறுக்குங்கள்.
எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து, தயிர், உப்பு சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.
உடலுக்கு சத்தையும் நாவுக்கு சுவையையும் அள்ளித்தரும் பச்சடி இது.