வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட். 

மட்டன் ரோகன் ஜோஸ்
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் ரோகன் ஜோஸ் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறையின் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:

மீடியம் அளவு சைஸ் மட்டன் துண்டுகள் - 500 கிராம்

கிராம்பு - 3

ஏலக்காய் - 5

இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காய விழுது (எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) - 50 கிராம்

மிளகாய்த் தூள் - இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

அரைத்த தக்காளி விழுது - 100 மில்லி

முந்திரிப் பருப்பு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

கொத்த மல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கிய பின் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.
பின்னர் மட்டன், தயிர், உப்பு, வெங்காய விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். கலவை நன்றாக வெந்ததும்

அதனுடன் தக்காளி விழுது சேர்த்து கொதிக்க விட்டு, பின் முந்திரி விழுதைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். கலவையை நன்கு கலக்கி விட்டு, கரம் மசாலாத் தூள் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும்.

இடைப் பட்ட நேரத்தில், 5-10 மில்லி வெண்ணீரில் குங்குமப் பூவை சேர்த்து நன்றாகக் கலக்கி, அந்நீரை அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கி, நறுக்கிய கொத்து மல்லித் தழையை தூவி இறக்கவும்.

சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை வகை உணவு களுடன் மட்டன் ரோகன் ஜோஸினை சேர்த்துச் சாப்பிடலாம்.