சத்து மிக்க காலிப்ளவர் சப்பாத்தி செய்வது எப்படி?





சத்து மிக்க காலிப்ளவர் சப்பாத்தி செய்வது எப்படி?

0
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக் கொள்ள கூட்டு, பொரியல் ஆகியவை செய்வதற்கு ஏற்ற ஒரு காய் வகையாக காலிபிளவர் இருக்கிறது. 
சத்து மிக்க காலிப்ளவர் சப்பாத்தி
மிகப் பழங்காலத்திலிருந்து காலிப்ளவர் பல நாடுகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 

காலிபிளவரில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்க 5 நிமிடத்திற்கு மேல் காலிபிளவரை நெருப்பில் வதக்கவோ, வாட்டவோ கூடாது என்பது சமையல் வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கிறது. 

நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்களுக்கு உடல் வலிமை கிடைக்கவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மை காலிபிளவருக்கு அதிகமுண்டு.

இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. இந்த காலிப்ளவர் கொண்டு காலிப்ளவர் சப்பாத்தி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 5

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - ஒரு கப்

எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:
காலிப்ளவர் சப்பாத்தி
காலிபிளவரை அலம்பிக் கொண்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் தண்ணீர் விடாமல் திரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 

இல்லை யென்றால் அதையும் துருவிக் கொள்ளலாம். துருவிய காலி பிளவர், பச்சை மிளகாய், சீரகம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியன வற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி விடவும்.

சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். இதனுடன் நறுக்கிய கொத்த மல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசையவும்.

ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பிசைந்த மாவை மூடி வைத்து விடவும். பிறகு உருண்டை களாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக் கல்லில் போட்டு வேக விடவும். 

திருப்பிப் போட்டு வேக விடவும். அடிக்கடி திருப்பிப் போட வேண்டும். பிறகு எண்ணெய் விட்டு 2,3 முறை திருப்பிப் போட்டு விட்டுத் தட்டில் போடவும்.

இன்னொரு முறை:

காலி பிளவரைத் துருவிக் கொண்டு அதனை ஒரு வாணலியில் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, காரப்பொடி இவை அனைத்தையும் சேர்த்து வதக்கி  கொள்ளவும். 
பிறகு இந்த மசாலாவைச் சப்பாத்தி மாவை இடும் போது உள்ளே வைத்து இட்டாலும் சுவை நன்றாக இருக்கும். ஈரம் இருந்தால் பிழிந்து கொள்ள வேண்டும், இல்லை யென்றால் சப்பாத்தி இட வராது.

இதை வதக்காமல் பச்சையாகவும் செய்யலாம், வட இந்தியர்களின் முறையும் அதுவே. 

காலி பிளவரைத் தண்ணீரின்றிப் பிழிந்து விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் சேர்ந்து சப்பாத்தி மாவினுள் வைத்துச் செய்வர்.

கூடுதல் தகவல்கள்:

1. காலிபிளவரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உப்பு கலந்த சுடு தண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அதிலுள்ள கிருமிகள் அழிந்து விடும்.பிறகு ஈரம் போகத் துடைக்க வேண்டும்.

2. சத்து மிகுந்த காலிபிளவர் சப்பாத்தியை இணை உணவு இல்லாமலே வெறுமனே உண்ணலாம். மாவைப் பிசைந்து ஊற வைப்பதால் படு மென்மையாக வரும்.
3. சப்பாத்தி நிறைய பேருக்கு சரியாக வருவதில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்கள் இவ்வகை பரோத்தாக்களைச் செய்தால் நற்பெயர் பெறலாம்.

(ஏனென்றால் சிலருக்கு வெறும் சப்பாத்தி நேரமாக ஆகக் கல் போல் ஆகி விடும். இந்த சப்பாத்திகள் அப்படியல்ல).

4. வட இந்தியர்கள் செய்யும் இவ்வகை உணவுகளைக் கவனமாகச் செய்தால் மட்டுமே வெற்றி கிட்டும் என்பது அனுபவ ரீதியான உண்மை.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)