காய்கறி ரவா உப்புமா செய்வது எப்படி?





காய்கறி ரவா உப்புமா செய்வது எப்படி?

தேவையானவை:

ரவை- 2 கப்

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 1

குடமிளகாய்- 1

காரட்- 1

பச்சைப்பட்டாணி- 1 கப்

உருளைக்கிழங்கு- 1

முட்டைக்கோஸ்- துருவியது ஒரு கப்

இஞ்சி- 1 துண்டு

பச்சைமிளகாய்- 2

மிளகாய்வற்றல்- 2

உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு- 1 1/2 டீஸ்பூன்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 இணுக்கு

கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. ரவையைச் சிவக்க வறுக்கவும், வறுத்த ரவையாக இருப்பின் ஓரளவுக்கு வறுக்கவும்.

காய்கறி ரவா உப்புமா செய்வது

2. 1 குவளை ரவைக்கு 1 1/2 குவளை தண்ணீரை வேக வைக்க வேண்டும். இங்கு 2 குவளை ரவை என்றதால் 3 முதல் மூன்றரை வரை அளவிலானத் தண்ணீரைத் தனியே கொதிக்க விடவும்.

3. வாணலியில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாழிசம் செய்து, இஞ்சி, வெங்காயத்தை வதக்க வேண்டும்.

4. பிறகு குடமிளகாய் உட்பட பிற காய்கறிகளைச் சேர்த்து வதக்கின பிறகு கடைசியாகத் தக்காளியைச் சேர்க்க வேண்டும், தக்காளி சீக்கிரம் வதங்குமாதலால் இறுதியால் சேர்த்தால் போதும்.

5. கொதித்த தண்ணீரைக் காய் வதக்கலுடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.

6. காய் வெந்தவுடன் தனியே ஆற வைத்த ரவையைக் கொதிக்கும் கலவையுடன் கொட்டிக் கொண்டே கிளற வேண்டும்(இல்லையென்றால் அடி பிடித்து விடும்).

சிறிது வேக விடவும், கிளறிக் கொண்டே வரவும், எண்ணெயிடும் போது ஒட்டாமல் வரும், அப்போது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. ரவா உப்புமாவின் சுவை ரவையை வதக்குவதிலே இருக்கிறது, சிலருக்கு உப்புமா ருசிக்காததற்கு இது கூடக் காரணமாக இருக்கலாம்.

2. காய்கறிகள் அவரவர் விருப்பம் போல் கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்.

3. முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடியை நெய்யில் வதக்கி உப்புமாவை அடுப்பிலிருந்து இறக்கும் முன் தூவலாம்.

4. ரவையுடன் சேமியாவும் சேர்த்து(இரண்டுமே தனித்தனியே வதக்கப்பட வேண்டும், அளவில் ஒரு குவளைத் தண்ணீரைக் கூடச் சேர்க்க வேண்டும்.) ரவா சேமியா உப்புமாவும் ருசியை அள்ளும்.

5. கோதுமை ரவை உடலிற்கு மிகவும் நல்லது, அதையும் மேற்கூறிய வகையில் செய்யலாம்.

6. மோர் கரைத்து தண்ணீர் வேக விடும் போது சேர்த்தும் ரவா உப்புமா செய்யலாம், புளிப்புச் சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.

7. பத்து நிமிடங்களில் தயார் செய்து விடக் கூடிய எளிய சுவை மிகுந்த சிற்றுண்டி வகை இது.
Tags: