பட்டாணி புலாவ் செய்வது எப்படி?





பட்டாணி புலாவ் செய்வது எப்படி?

பட்டாணி புலாவ் என்பது பச்சைப் ப‌ட்டாணியைக் கொண்டு செய்யப்படும் புலாவ் ஆகும். இது பெரியோர் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும்.
பட்டாணி புலாவ் செய்வது
பச்சைப் பட்டாணி கிடைக்கும் சீசனில் மட்டுமே அதனைச் செய்ய முடியும். எளிய வழியில் சுவையான பச்சைப் பட்டாணி புலாவ் செய்முறை பற்றிப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி – 400 கிராம் (1 கப்)

பச்சைப்பட்டாணி – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம்

இஞ்சி – ஆட்காட்டி விரல் அளவு

பூண்டு – 3 முதல் 4 பற்கள்

கொத்தமல்லி இலை – தேவையான அளவு

புதினா – தேவையான அளவு

பச்சை‍ மிளகாய் – 2

தாளிக்க

நல்ல எண்ணெய் – தேவையான அளவு

பட்டை – சிறிதளவு

கிராம்பு – 3 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

பிரிஞ்சு இலை – 1 எண்ணம்

செய்முறை
பிரியாணி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் 800 கிராம் (2 கப்) அளவு இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.
பட்டாணி புலாவ்
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும். 

இஞ்சி மற்றும் பூண்டினை ஒரு சேர மிக்ஸியில் அடித்து வைத்துக் கொள்ளவும். கொத்த மல்லி மற்றும் புதினா இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிட்ரஸ் அழற்சி இருக்கா, இல்லையானு தெரியுமா? அதை தெரிஞ்சு கொள்ள… !
பச்சை‍ மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.

அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை ஆகியவற்றைப் போடவும். இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து, அதனுடன் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பாதி வதங்கிய நிலையில் அதனுடன் பச்சைப் பட்டாணியைச் சேர்க்கவும்.

பட்டாணிச் சேர்த்தவுடன் பட்டாணிக்குத் தேவையான அளவு உப்பு, நீளவாக்கில் கீறிய‌ப் பச்சை‍ மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். கலவையை கரண்டியால் கிளறி விட்டு அதனுடன் நனைய வைத்துள்ள பிரியாணி அரிசியைச் சேர்க்கவும்.
அரிசிக்குத் தேவையான உப்பினைச் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போடவும். அடுப்பை சிம்மில் பத்து நிமிடங்கள் வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து புலாவை ஒரு சேர கிளறி விடவும். சுவையான பட்டாணி புலாவ் தயார். இதனுடன் தக்காளி சாஸ் மற்றும் பிளைன் சால்னா சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பிரியாணி அரிசிக்குப் பதில் பாசுமதி அரிசி சேர்த்து புலாவ் தயார் செய்யலாம். தேங்காய் பாலுக்கு முற்றிய தேங்காயைப் பயன்படுத்தவும்.
Tags: