காளான் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?





காளான் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

பூஞ்சை வகையைச் சேர்ந்த காளானை ஆண்டாண்டு காலமாக உணவில் சேர்த்து வருகிறோம். அனைத்து வகையான காளான்களும் உண்ணக்கூடிய காளான் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.  
காளான் சிக்கன் குழம்பு
காளான்களின் விஷக் காளான்களும் இருக்கின்றன. எனவே, காளான் வாங்கும் போது கவனம் தேவை. காளான்கள் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப் படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. 

ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் அடைப்பை சரி செய்கிறது. இதனால், உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளைத் தடுக்கிறது. 

காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 

அதே போல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதுவரை காளானை பல வகையில் சமைத்திருப்போம். 

அதிலும் காளான் ஒரு நல்ல அசைவ உணவு ருசியைத் தரக்கூடிய ஒரு அருமையான சைவ உணவுப் பொருள்.பொதுவாக காளானை மட்டும் தனியாக தான், குழம்பு செய்திருப்போம். 

ஆனால் அத்தகைய காளானை சிக்கனுடன் சேர்த்து, குழம்பு செய்தால், அதன் சுவையே தனி தான். 
சரி, இப்போது அந்த காளான் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கப் (சிறு துண்டுக ளாக்கப்பட்டது)

காளான் - 1 கப் (நறுக்கியது)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் தக்காளியைத் தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்ட வேண்டும்.

அடுத்து, அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிக்கன் ஓரளவு வேகும் வரை வதக்கவும். பிறகு அதில் காளான் துண்டுகளை போட்டு, 3-4 நிமிடம் கிளற வேண்டும்.
பின் தேங்காய் விழுது மற்றும் அரைத்த தக்காளியை ஊற்றி, வேண்டுமெனில் தண்ணீர் சேர்த்து, சிக்கன் வேகும் வரை நன்கு கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான காளான் சிக்கன் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
Tags: