ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் செய்வது எப்படி?





ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் செய்வது எப்படி?

இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. 
ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல்
ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். 
இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

விரால் மீன் – 250 கிராம்

நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்

நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்)

மிளகாய் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

தயிர் – 1/4 கப்

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

முட்டை – 1

உப்பு – சிறிது

செய்முறை:
முதலில் மீனின் சதைப் பகுதியை சற்று பெரிய துண்டுகளாக்கி, நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பௌலில் மீன் துண்டுகளைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பின் அதில் மிளகாய் பேஸ்ட், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அத்துடன் சோயா சாஸ் மற்றும் தயிர் சேர்த்து கிளறி, அதோடு மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். 

பிறகு அதோடு பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், அப்போலோ மீன் வறுவல் ரெடி!!!
Tags: