டேஸ்டியான தக்காளி ஓட்ஸ் அல்வா செய்வது எப்படி?





டேஸ்டியான தக்காளி ஓட்ஸ் அல்வா செய்வது எப்படி?

0
தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கி யுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. 
டேஸ்டியான தக்காளி ஓட்ஸ் அல்வா செய்வது எப்படி?
அது மட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.  உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில்  பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தேவையானவை . :

தக்காளி விழுது - ஒரு கப்

ஓட்ஸ் - ஒரு கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

பால் பவுடர் - ஒரு மேசைக் கரண்டி

ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை

பிஸ்தா துருவல் - அரை கப்

உப்பு - சிட்டிகை

நெய் - 2 மேசைக் கரண்டி

செய்முறை :
தக்காளி ஓட்ஸ் அல்வா
முதலில் தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் வெடிக்கும் வரை வைத்திருக்கவும். சூடு ஆறியதும் எடுத்து தோல் உரித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் ஊறிய ஓட்ஸை எடுத்து வடிகட்டியில் பிழிந்து பால் எடுக்கவும். மிக்ஸியில் சர்க்கரையை போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

பிஸ்தாவை தோல் உரித்து துருவி கொள்ளவும். தக்காளி விழுது, ஓட்ஸ் பால், ஒரு மேசைக் கரண்டி நெய் சேர்த்து 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும். 

இடையில் ஒரு முறை எடுத்து கிளறி விடவும் பின்னர் அதனுடன் பால் பவுடர் சேர்த்து கலந்து மீண்டும் 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும். 

அதன் பிறகு வெளியில் எடுத்து கிளறி பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த் தூள் மீதமுள்ள நெய், பிஸ்தா துருவல் சேர்த்து கிளறி மீண்டும் 5 நிமிடம் மைக்ரோவேவ் மீடியமில் வைக்கவும். 

ஒவ்வொரு முறை வைக்கும் போதும் இடையில் எடுத்து கிளறி வைக்கவும். கடைசியாக வெளியில் எடுத்து நன்கு கிளறி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டவும். சுவையான தக்காளி ஓட்ஸ் அல்வா தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)